Published : 11 Oct 2020 07:43 AM
Last Updated : 11 Oct 2020 07:43 AM

சென்னை சூளை, பெரியமேடு பகுதியில் வீடு புகுந்து காலணிகளை திருடி விற்கும் கும்பல்: புகாரின்பேரில் போலீஸார் விசாரணை

வீடுகளுக்குள் புகுந்து காலணிகளை திருடி விற்பனை செய்யும் கும்பல் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சூளை வெங்கடாசலம் தெருவில் வசித்து வரும் சந்தானம் என்பவரது வீட்டில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், வீட்டின் வாசல்படி அருகே ஷூ ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த 3 ஜோடி புதிய காலணிகள் காணாமல் போயுள்ளன. வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர், பட்டப்பகலில் இவரது வீட்டு வாசலில் உள்ள காலணிகளை திருடி பாலித்தீன் பைகளில் போட்டு எடுத்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சந்தானத்தின் வீட்டில் ஏற்கெனவே 2 முறை இதே போல திருட்டு நடந்துள்ளது. தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொடுத்து ஆதாரத்துடன் பெரியமேடு காவல் நிலையத்தில் சந்தானம் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களில் பெரியமேட்டில் உள்ள பல வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தொடர்ச்சியாக காலணிகள் திருடப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்து யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வேப்பேரி, பெரியமேடு ஆகிய இடங்களில் காலணிகளை விற்பனை செய்யும் கடைகள் அதிகம் இருக்கும் என்பதால், புதிய காலணிகளை திருடி அப்பகுதிகளில் உள்ள சில கடைகளில் விற்று, அதன் மூலம் திருடர்கள் சம்பாதித்து வருகின்றனர். காலணிகளை திருடும் நபர்கள் குறித்து முதன்முறையாக விசாரணை நடந்து வருகிறது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடினால் புகார் கொடுப்பார்கள். பிரச்சினை பெரிதாகிவிடும். ஆனால் காலணிகளை திருடினால் புகார் கொடுக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் அதிகமான காலணிகள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x