திருவாரூர் அருகே திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கொலை
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியை அடுத்துள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்தவர் கணேசன்(48). ஊராட்சி மன்றத் தலைவரான இவர், திமுகவைச் சேர்ந்தவர். கடந்த சில தினங்களுக்கு முன் கழிவுநீர் சாக்கடை பிரச்சினையில் கணேசனின் மகன் பிரபாகரன், தம்பி ராமர் ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், மகேந்திரன் ஆகிய இருவரையும் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கணேசன் நேற்று முன்தினம் இரவு எரவாஞ்சேரி கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, 8 பேர் கொண்ட கும்பலால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டப்பட்டார். அப்பகுதியினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவ்வழக்கில், 4 பேர் லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் சந்தோஷ், அபிஷேக், ராதாகிருஷ்ணன், மகேந்திரன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
