போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் சொத்துக்காக கணவனை கடத்திய மனைவி: மாங்காடு போலீஸார் தீவிர விசாரணை

போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் சொத்துக்காக கணவனை கடத்திய மனைவி: மாங்காடு போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

போரூர் அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் முத்து(42). புதுப்பேட்டையில் கடை நடத்தி வரும் இவர், கடந்த 1-ம் தேதி கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும், கண்டுபிடித்து தருமாறும் இவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் மாங்காடு போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் தான் காரில் இருப்பதாக உறவினர்களுக்கு முத்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அங்குசென்றபோது உடலில் காயங்களுடன் காரில் இருந்த முத்துவை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

தகவலறிந்த மாங்காடு போலீஸார் காயமடைந்த முத்துவைமீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

முத்துவின் மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 1-ம் தேதி கடையில் இருந்த முத்துவை அவரது மனைவி திவ்யா சந்தித்து, தன்னை வீட்டில் கொண்டுவிடுமாறு கூறியுள்ளார். திருமழிசை அருகே கார் சென்றபோது காரை நிறுத்துமாறு திவ்யா கூறியதையடுத்து, காரை முத்து நிறுத்தியுள்ளார்.

அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர் முத்து முகத்தில் மயக்க மருந்தை தெளித்து, அவர் மயங்கியவுடன் காரில் வேலூர் அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு வீட்டில்வைத்து, சொத்துக்காக மனைவியின் உறவினர்கள் முத்துவை தாக்கி உள்ளனர். மேலும் மாங்காடு போலீஸார் முத்துவை தேடிவந்ததை அடுத்து அவரைகாரில் கொண்டுவந்து வண்டலூர் அருகே விட்டுச் சென்றுள்ளனர் என்றனர்.

மீட்கப்பட்ட முத்து அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த இடம் புதுப்பேட்டை என்பதால், வழக்கை போலீஸார் தொடர்புடைய காவல் நிலையத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in