

ஆந்திர மாநிலத்திலிருந்து, தமிழகத்துக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு ஆரம்பாக்கம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திர பகுதியிலிருந்து, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த மோட்டார் சைக்கிளை போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். அச்சோதனையில், மோட்டார் சைக்கிளில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அதில் வந்தஇரு இளைஞர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னை, மாதவரம் பகுதியைச் சேர்ந்த லெனின் இன்பராஜ்(24), ரூபேஷ்(23) என்பதும், மாதவரம் பகுதியில் விற்பனை செய்வதற்காக, ஆந்திர மாநிலப் பகுதியிலிருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தியதும் தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீஸார், லெனின் இன்பராஜ், ரூபேஷ் ஆகியோரை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து, கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.