

செங்குன்றம் அருகே ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள சுமார் அரை டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
டேங்கர் லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக, தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் - மொண்டியம்மன் நகர் அருகே மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தார் ஏற்றிவரும் டேங்கர் லாரி ஒன்றை சோதனையிட்டதில், அதில் இருந்த சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள அரைடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து லாரிஓட்டுநர் சச்சின் நாராயணன், கிளீனர் சுந்தர் ஆகிய இருவரையும் கைதுசெய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், விசாகப்பட்டினத்தில் இருந்து திருச்சிக்கு கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதில், சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு நேற்று இரவு சென்னை பெருநகர காவல் ஆணையர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.