சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரண்: நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

வழக்கறிஞர் ராஜேஷ் கொலை வழக்கு தொடர்பாக வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த 8 பேர்.
வழக்கறிஞர் ராஜேஷ் கொலை வழக்கு தொடர்பாக வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த 8 பேர்.
Updated on
1 min read

சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேர் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

சென்னை வில்லிவாக்கம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் (38). இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா (34). வழக்கறிஞரான ராஜேஷ் மக்கள் ஆளும் அரசியல் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் சட்ட ஆலோசகராகவும் இருந்தார்.

இந்நிலையில், ராஜேஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி வியாசர்பாடியில் கால்பந்துப் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை வியாசர்பாடிக்குச் சென்று கால்பந்துப்போட்டியைத் தொடங்கி வைத்துவிட்டு தனது காரில் எம்டிஹெச் சாலையில் உள்ள தனது நண்பரின் அலுவலகத்துக்கு வந்து அங்கு நண்பர்களுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, தலைக்கவசம், முகக்கவசம் அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே புகுந்து அங்கிருந்த வழக்கறிஞர் ராஜேஷ் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைஅப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்ததும் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.

இதுகுறித்து, வில்லிவாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அண்ணாநகர் காவல் துறை உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், கொலை செய்யப்பட்ட ராஜேஷ் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

மேலும், தனியார் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மற்றொரு பிரிவினருக்கும் வழக்கறிஞர் ராஜேஷுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. எனவே, முன்பகை காரணமாக இந்தக் கொலை நடத்திருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகித்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் ராஜேஷ் கொலை வழக்கில் தொடர்புள்ளதாகக் கூறி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று (அக். 6) காலை 11 மணியளவில் நீதிபதி காளிமுத்துவேல் முன்னிலையில் 8 பேர் சரணடைந்தனர்.

விசாரணையில், அவர்கள் சென்னை வியாசர்பாடி பி.வி. காலனியைச் சேர்ந்த முருகேசன் (30), கும்பகோணம் சின்னகரை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (22), வியாசர்பாடி கங்கோச்சிநகர் அருண் (22), கும்பகோணம் ஸ்ரீநாத் (21), திருநெல்வேலியைச் சேர்ந்த வைரமணி (20), வியாசர்பாடியைச் சேர்ந்த ருக்கேஸ்வரன் (20), சஞ்சை (21), திருவள்ளூரைச் சேர்ந்த கிரோஷ்குமார் (26) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கொலை வழக்கில் சரணடைந்த 8 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி காளிமுத்துவேல் உத்தரவிட்டார். இதற்கிடையே, சரணடைந்த 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க வில்லிவாக்கம் காவல் துறையினர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் இன்று மாலை மனுத்தாக்கல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in