Last Updated : 01 Oct, 2020 02:19 PM

 

Published : 01 Oct 2020 02:19 PM
Last Updated : 01 Oct 2020 02:19 PM

செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்: தீயணைப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள கள்ளம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலசாமி (26). இவருக்கு, சற்று மனநல பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலையில் அருணாசலசாமியை அவரது குடும்பத்தினர் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் உள்ள சில பொருட்களை கீழே போட்டு உடைத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறிவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அப்பகுதியில் உள்ள சுமார் 200 அடி உயர செல்போன் டவரில் ஏறினார். கோபுரத்தின் உச்சிப் பகுதிக்குச் சென்ற அவர், கீழே குதிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, சுரண்டை தீயணைப்புப் படையினர் நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

செல்போன் டவரில் ஏறி, அருணாசலசாமியிடம் கனிவாகப் பேசி சமாதானப்படுத்தினர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர் அருணாசலசாமியை தீயணைப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அறிவுரை கூறி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x