

அரியலூரில் நகை்கடை சுவரை துளையிட்டு 32 பவுன் நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
அரியலூர் சின்னக் கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர்சவுந்தரராஜன்(70). நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று காலை நகைக்கடைக்கு அருகில் தேங்காய் கடை வைத்திருக்கும் ராமலிங்கம் என்பவர் தனது கடையை திறக்க வந்தபோது, நகைக்கடை சுவரில் துளையிடப்பட்டிருந்ததை பார்த்துவிட்டு சவுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, அரியலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு கடைக்கு வந்த சவுந்தரராஜன், கடையைத் திறந்துபார்த்தபோது கடையில் இருந்த தோடு, செயின், மோதிரம் உள்ளிட்ட 32 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடையை பார்வையிட்டு டிஎஸ்பி மதன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். நகைக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவின் இயக்கத்தை கடைஉரிமையாளரே இரவு கடையைமூடும்போது நிறுத்திவிட்டு செல்வது வழக்கம் என்பதால் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதேபோல, செந்துறை கடைவீதியில் உள்ள ரவிக்குமார்(44) என்பவரின் நகைக்கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு நகைகளை திருட முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.