

அரியலூரில் நகைக்கடையின் சுவரை துளையிட்டு 50 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
அரியலூர் காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (70). இவர், அரியலூர் சின்னகடை வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் இவர் நேற்று (செப்.24), வியாபாரம் முடித்து விட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில், இன்று (செப். 25) காலை, இவரது நகைக்கடையின் அருகே தேங்காய் கடை வைத்துள்ள ராமலிங்கம் என்பவர் தனது கடையை திறந்த போது நகைக்கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு இருப்பது கண்டு சவுந்தரராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர், அரியலூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் கடையில் சென்று ஆய்வு செய்ததில் சுமார் 50 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் அரியலூர் டிஎஸ்பி மதன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்துறையில் திருட்டு சம்பவம்
செந்துறை கடை வீதியில் அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் (44) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்புறம் உள்ள சுவற்றினை மர்ம நபர்கள் நேற்று இரவு துளையிட்டு திருட முயற்சி செய்துள்ளனர். கடையின் அருகேவுள்ள வீட்டில் இரவு விளக்கு போட்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆசிரியர் வீட்டில் திருட்டு
செந்துறையில் மர்மநபர்கள் திருட முயற்சித்த நகைக்கடையின் எதிரே உள்ள ஆசிரியரான தர்மலிங்கம் (50) வீட்டில் மர்ம நபர் நேற்றிரவு உள்ளே புகுந்து 3 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை திருடி சென்றிருப்பது இன்று காலை தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் செந்துறை போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பெரம்பலூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் மலர் நகைக்கடையிலிருந்து ஆசிரியர் வீட்டுக்கு சென்று பின்னர் செந்துறை ரயில் நிலையம் சென்றதால், நகைக்கடையில் திருட்டு முயற்சி, ஆசிரியர் வீட்டில் திருடியது ஒரு கும்பலாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.