

திருநின்றவூரில் முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்த சம்பவம் நடந்துள்ளது.
திருநின்றவூர், சம்பங்கி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி லட்சுமி. நேற்று முன்தினம் மாலை லட்சுமி அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிச் சென்றார்.
தாசர்புரம் பிரதான சாலையில் நடந்து வந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் லட்சுமியிடம் ஒரு துண்டுச் சீட்டைக் காண்பித்து அதில் இருந்த முகவரிக்குச் செல்ல வழி கேட்டனர். அப்போது திடீரென அவர்கள் லட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, திருநின்றவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.