புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் வெட்டிக்கொலை: பொதுமக்கள் சாலை மறியல்

புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் வெட்டிக்கொலை: பொதுமக்கள் சாலை மறியல்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் ராஜலிங்கம் மர்ம நபர்களால் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (50). இவர் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளராக பதவியில் இருந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

அந்த கொலை வழக்கில் ராஜ லிங்கத்திற்கு தொடர்பு இருப்பதாகக் கூறி போலீஸார் அவரையும் கைது செய்தனர். அதையடுத்து, மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து ராஜலிங்கம் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை தோட்டத்தில் இருந்த ராஜலிங்கத்தை மர்ம நபர்கள் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர்.

அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ராஜ லிங்கத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

திருமங்கலம் அருகே சென்ற போது வழியிலேயே ராஜலிங்கம் உயிரிழந்தார். அதை எடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு ராஜு லிங்கத்தையும் சடலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி முதுகுடி பொதுமக்கள் ராஜபாளையம் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் தெற்கு மற்றும் தளவாய்புரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். சாலை மறியலால் அப்பகுதியில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராஜலிங்கம் கொலை செய்யப்பட்ட இடத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நேரில் சென்று விசாரணை நடத்தினார். புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in