

சென்னை நந்தனத்தில் உள்ள சிண்டிகேட் வங்கியில் தங்க நகைகளின் மீது நகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முரளி என்பவர் நகை மதிப்பீட்டாளராக இருக்கிறார். வங்கியில் நகைக் கடனுக்காக வழங்கப்பட்ட தங்க நகைகளை கடந்த 30-ம் தேதி வங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது போலியான நகைகள் அடகுவைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். 2018-ம் ஆண்டில் இருந்து போலியான நகைகள் மூலம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
வங்கி அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், நகை மதிப்பீட்டாளர் முரளி மூலம் இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சிண்டிகேட் வங்கியின் மூத்த கிளை மேலாளர் பிரவீன்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், நகை மதிப்பீட்டாளரான முரளி, தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மூலம் போலி நகைகளை வங்கிக்கு கொண்டுவரச் செய்து, அவற்றை உண்மையான தங்க நகைகள் எனக்கூறி, பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் முரளி, மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தோழி சாந்தி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.