

வேலூரில் சரக்கு வாகனத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் கடத்தியதாக மூன்று பேர் கைதான நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பிஸ்கட் பாக்கெட் பெட்டிகள் என்றுகூறி தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா கடத்தி வருவது தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாகத் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க காவல் துறையினர் அவ்வப்போது திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பள்ளிகொண்டா காவல் நிலையக் காவல்துறையினர் இன்று (செப். 9) அதிகாலை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவல்துறையினரை ஏமாற்றிவிட்டு கர்நாடக பதிவெண் கொண்ட சரக்கு வாகனம் வேகமாகச் சென்றது.
இதுகுறித்த தகவல் மற்ற காவல் நிலையங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த சரக்கு வாகனத்தை சத்துவாச்சாரி காவல் நிலைய ரோந்துப் பிரிவு காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். வாகனத்தில் இருந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்துள்ள ஆனேகால் தாலுக்கா ஹெப்பகோடி, பனஹள்ளி பகுதியைச் சேர்ந்த அப்சான் (26), நாகராஜூ (43) என்று தெரியவந்தது.
சரக்கு வாகனத்தைச் சோதனையிட்டதில் 50 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றை ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்துக்குக் கடத்திச் செல்வதாகக் கூறியுள்ளனர்.
மேலும் ஒருவர் கைது
இந்தக் கடத்தல் பார்சல் குறித்து ராணிப்பேட்டை மாவட்டக் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலின்பேரில் அரக்கோணத்தில் லட்சுமிகாந்த் (30) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவரது மளிகைக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து பெட்டிகளில் இருந்த தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
பிஸ்கட் பெட்டிகளாக கடத்தல்
கர்நாடக மாநிலத்தில் குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனைக்குத் தடையில்லை. ஆனால், தமிழகத்தில் தடை இருப்பதால் பெங்களூருவில் இருந்து 'பிக் அப்' வகை சரக்கு வாகனங்கள் மூலம் தமிழகத்துக்குள் கடத்தி வருகின்றனர். வழியில் காவலர்கள் யாராவது சோதனையிட வந்தால் பிஸ்கட் பெட்டிகள் இருப்பதாகக் கூறிவந்துள்ளனர்.
பெட்டிகளை யாரும் பிரிக்கக் கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் பேப்பர் ரோல் மூலம் சுற்றி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பிஸ்கட் பாக்கெட் பெட்டிகளாகத் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகளைக் கடத்தி வந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.