தென்காசியில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டில் இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டு 80 பவுன் நகை, பணம் கொள்ளை

தென்காசியில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டில் இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டு 80 பவுன் நகை, பணம் கொள்ளை
Updated on
1 min read

தென்காசியில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டு 80 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

தென்காசியில் திருநெல்வேலி பிரதான சாலையில் தனியார் மருத்துவமனை அருகே போக்குவரத்து சிக்னல் உள்ளது.

இதன் அருகே உள்ள வீட்டில் வசித்து வருபவர் ஜெயபால் (63). இவர், தென்காசி அருகே மர அறுவை ஆலை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி விஜயலெட்சுமி (58). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுத்து திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இன்று பகலில் விஜயலெட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த விஜயலெட்சுமியை மிரட்டி, கட்டிப் போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த நகை, வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மாலையில் வீட்டு வேலைக்கு வருபவர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கட்டை அவிழ்த்து, விஜயலெட்சுமியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. 80 பவுன் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தென்காசி- திருநெல்வேலி சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். பட்டப்பகலில் இந்த பகுதியில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in