Last Updated : 04 Sep, 2020 04:43 PM

 

Published : 04 Sep 2020 04:43 PM
Last Updated : 04 Sep 2020 04:43 PM

தென்காசி மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட 10 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 10 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மணல் திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்கு புகார்கள் சென்றன. மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், மணல் திருட்டு குறித்த புகார்களை 8610791002 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றும், தகவல் கொடுக்கும் நபர்கள் பற்றிய ரகசியம் காக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, மணல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீஸாருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தகவல் அளித்தனர். காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸார் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும் மண் திருட்டில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 10 டிராக்டர்கள், இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மணல் திருட்டு தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து சோதனை நடத்தி, மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x