

ஆம்பூர் அருகே அரசுக்குச் சொந்தமான இடத்தில் விலை உயர்ந்த, அரிய வகையிலான மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அங்கு அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 1954-ம் ஆண்டு டால்கோ தோல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்காக, தொழிற்சாலைக்கு அருகாமையில் 65 குடியிருப்புகள் கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டன.
அதன் அருகாமையில் பூங்காவும் அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட அரியவகை மரங்கள் நடப்பட்டன. தேக்கு, தைலம், புங்கம், வேம்பு உள்ளிட்ட பல வகையான மரங்கள் இங்கு வளர்க்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, தோல் தொழிற்சாலையில் அரசுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு டால்கோ தோல் தொழிற்சாலை மூடப்பட்டது.
தொழிற்சாலை மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்று குடியேறினர். இதனால், டால்கோ குடியிருப்பு வளாகம் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியது. இதையறிந்த சில சமூக விரோதிகள் குடியிருப்பு வளாகத்தில் நுழைந்து அங்குள்ள தளவாடப் பொருட்களைத் திருடிச்சென்றனர்.
இதனால், டால்கோ குடியிருப்பு வளாகம் பழுதடைந்து காணப்பட்டது. சுவர்கள், மேற்கூரைகள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் தற்போது உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடியிருப்புப் பகுதியில் 50 ஆண்டுகளாக இருந்த தைலம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள், மர்ம நபர்களால் இரவோடு, இரவாக வெட்டி லாரிகளில் கடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், குடியிருப்பு வளாகத்தில் வெட்டப்பட்ட மரங்களைப் புகைப்படம் எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், ஆம்பூர் தாலுக்கா காவல் நிலையம் ஆகியவற்றுக்கு ஆதாரத்துடன் இன்று (செப்.1) புகார் மனு அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து, ஆம்பூர் தாலுக்கா காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தியதில், டால்கோ குடியிருப்புப் பகுதியில் காய்ந்துபோன மரங்களை வெட்ட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளைச் செய்து வருவதாகவும் அங்கிருந்த சிலர் தெரிவித்தனர். இருப்பினும், இது தொடர்பாக வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.