

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து மாமியார், மருமகள் இன்று உயிரிழந்தனர்.
ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன். இவர், தனது வீட்டைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஆக.30) இரவு எதிர்பாராத விதமாக வீட்டுக்கு செல்லும் மின்கம்பி அறுந்து வேலியின் மீது விழுந்தது. இதையறியாது, வேலியைப் பிடித்துக்கொண்டு இன்று (செப்.1) காலை குடிநீர் பிடித்த மகாதேவன் மனைவி ராதிகா (37), தாய் செ.ராஜகோகிலா (65) ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அந்த இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராதிகா, ராஜகோகிலா ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி அறந்தாங்கி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த ராதிகாவுக்கு மகன்கள் கவின் (8), கபீர் (4) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.