Last Updated : 30 Aug, 2020 05:56 PM

 

Published : 30 Aug 2020 05:56 PM
Last Updated : 30 Aug 2020 05:56 PM

இலங்கைக்குப் படகில் கடத்த முயன்ற 1,700 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; மண்டபம் பகுதியை சேர்ந்த மூவர் கைது

படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.1.36 கோடி மதிப்பிலான 1,700 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி நிலையத்தைச் சேர்ந்த கடலோர காவல் படை வீரர்கள், அபிராஜ் என்ற ரோந்து கப்பலில் நேற்று (ஆக.29) மன்னார் வளைகுடா பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சந்தேகமான வகையில் நாட்டுப் படகு ஒன்று சென்று கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கண்டனர்.

உடனே கப்பலை அந்த பகுதிக்கு செலுத்தி, அந்த படகை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, படகில் 34 மூட்டைகளில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தன. மொத்தம் 1,700 கிலோ எடை கொண்ட அந்த கடல் அட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.1.36 கோடியாகும். கடல் அட்டைகளுடன் படகை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், படகில் இருந்த மண்டபம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எட்வர்டு என்ற பிரான்சிஸ் (50), மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த சதக் அப்துல்லா (45), மண்டபம் வேதாளையை சேர்ந்த ஜெகதீஷ் (44) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளுடன் படகு மற்றும் கைது செய்யப்பட்ட மூவரையும் கடலோர காவல் படையினர் தூத்துக்குடிக்கு இன்று (ஆக.30) காலை அழைத்து வந்தனர். பின்னர் படகு, கடல் அட்டை மற்றும் கைது செய்யப்பட்ட மூவரும் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக சுங்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடல் அட்டைகளை பிடிக்கவும், விற்பனை செய்யவும் இந்திய வனவிலங்குகள் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடல் அட்டைகளில் மருத்துவக் குணங்கள் இருப்பதால் பல்வேறு வெளிநாடுகளில் அவற்றுக்கு அதிக கிராக்கி உள்ளது. இதனால் கடல் அட்டைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. தற்போது கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்குக் கடத்திச் சென்று, அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x