

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கழுகூர் அருகே கால் டாக்ஸி டயர் வெடித்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தோகைமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கால் டாக்ஸி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30). இவர் கழுகூர் அருகேயுள்ள குன்னாகவுண்டம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வந்தார். அதே பகுதயில் குள்ளமாபட்டியைச் சேர்ந்த பழனிசாமி (50), எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருந்தார். இவர்கள் இருவரும் இன்று (ஆக.29) மதியம் கழுகூர் சென்று உணவருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் குன்னாகவுண்டம்பட்டி திரும்பியுள்ளனர்.
அப்போது கழுகூர் அருகே எதிரே வந்த கால் டாக்ஸியின் முன் பக்க டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ராஜா, பழனிசாமி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்துத் தகவலறிந்த தோகைமலை காவல்துறையினர் இருவரின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து குளித்தலை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.