Last Updated : 29 Aug, 2020 04:10 PM

 

Published : 29 Aug 2020 04:10 PM
Last Updated : 29 Aug 2020 04:10 PM

ஆந்திரத்திலிருந்து புதுச்சேரிக்குக் கடத்தி வரப்பட்ட 74 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது; அதிக அளவில் பறிமுதலானது இதுவே முதல் முறை

கஞ்சா விற்பனை மற்றும் பதுக்கல் தொடர்பாக கைதாகி கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவர்.

புதுச்சேரி

ஆந்திர மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்குக் கடத்தி வரப்பட்டு விற்பனையில் இருந்த 74 கிலோ கஞ்சாவை புதுச்சேரி காவல் துறையினர் பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்துள்ளனர்.

கரோனா காலத்திலும் புதுச்சேரியில் கஞ்சா விற்பனை படுவேகமாக நடைபெற்று வருவதாகத் தொடர்ந்து புகர்கள் எழுந்து வருகின்றன. இதனைத் தடுக்க காவல்துறையினர் துரிதமாக ஈடுபட்டாலும் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. கரோனாவால் வேலை இழந்துள்ள இளைஞர்கள், பள்ளி-கல்லூரி செல்லாத மாணவர்கள், சிறுவர்கள் எனக் குறிவைத்து ஒரு கும்பல் விற்பனை செய்து வருகிறது. அதிலும் கல்லூரிகள், முக்கியப் பகுதிகள், பள்ளியையொட்டிய பகுதிகளில் விற்பனை நடப்பதாக பெரும்பாலானோர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் அதிக அளவில் வந்தன. இதையடுத்து கிடைத்த ரகசியத் தகவல்களைத் தொடர்ந்து தன்வந்தரி நகர் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கதிர்காமம் பகுதியில் கஞ்சா விற்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில் சிறிய சிறிய பைகளில் அவர்கள் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் பிடித்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட 74 கிலோ கஞ்சா பொட்டலங்கள்.

இது தொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்சா கொடாரா, காவல் கண்காணிப்பாளர் சுபம்கோஷ் ஆகியோர் இன்று (ஆக.29) கூறுகையில், "கஞ்சா விற்ற மூவரைப் பிடித்தபோது அவர்களிடம் 2 கிலோ கஞ்சா கிடைத்தது. அவர்களின் வீடுகளில் சோதனையிடப்பட்டது. பிடிபட்டோரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் வீமநகர் பகுதியில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த 72 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தோம். மொத்தமாக 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு 37 லட்ச ரூபாய். 36 பாக்கெட்டுகளாக அவை இருந்தன.

அதிகபட்சமாக 74 கிலோ கஞ்சா முதல் முறையாக ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கஞ்சா ஆந்திராவில் விசாகப்பட்டினத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகர் முதல் கிராஸ் பகுதியைச் சேர்ந்த அருண் (30), புது சாரம் ராஜீவ்காந்தி நகர் பிரித்திவிராஜ் (23), மேட்டுப்பாளையம் சண்முகாபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (26) மூவரையும் கரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x