திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் மண் கடத்தல்: தடுக்கச் சென்ற பெண் வட்டாட்சியர் மீது டிராக்டர் ஏற்ற முயற்சி; தப்பியோடிய கும்பல்

நள்ளிரவில் மண் கடத்தலைத் தடுக்க வருவாய்த் துறையினர் குழுவினருடன் சென்ற பெண் வட்டாட்சியர் சுமதி.
நள்ளிரவில் மண் கடத்தலைத் தடுக்க வருவாய்த் துறையினர் குழுவினருடன் சென்ற பெண் வட்டாட்சியர் சுமதி.
Updated on
1 min read

நாட்றாம்பள்ளி அருகே மண் கடத்தலைத் தடுக்கச் சென்ற பெண் வட்டாட்சியர் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சி நடந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி தாலுகா, கல்நார்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தசாமி (56). இவரது விவசாய நிலத்தில் மர்ம நபர்கள், இரவு நேரங்களில் மண் அள்ளி விற்பனை செய்து வருவதாக நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் சுமதிக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் சுமதி தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் தீர்த்தகிரி (புத்தகரம்), அனுமந்தன் (வெலக்கல்நத்தம்), கிராம உதவியாளர் வரதராஜன் உட்பட 6 பேர் கொண்ட வருவாய்த் துறையினர் புத்தகரம் பகுதிக்கு நேற்று ( ஆக.27) நள்ளிரவு ரோந்துக்குச் சென்றனர்.

அப்போது விவசாயி கோவிந்தசாமியின் நிலத்துக்கு அருகாமையில் உள்ள விவசாய நிலங்களில் மண் அள்ளிக்கொண்டு டிராக்டரில் 3 பேர் வந்தனர். வருவாய்த் துறையினர் வருவதைக் கண்டவுடன் அவர்கள் வட்டாட்சியர் சுமதியின் ஜீப் மீது டிராக்டரை ஏற்ற வேகமாக நேர் எதிரே வந்தனர்.

இதையறிந்த ஜீப் ஓட்டுநர் சாமர்த்தியமாக ஜீப்பை வலது பக்கமாகத் திருப்பினார். இதனால், டிராக்டர் மீது ஜீப் மோதுவது தவிர்க்கப்பட்டது. உடனே, டிராக்டரை எடுத்துக்கொண்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து, டிராக்டரை வட்டாட்சியர் சுமதி விரட்டிப் பிடிக்கப் பின்தொடர்ந்தார்.

சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்றதும், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் இறங்கியது. டிராக்டர் சக்கரம் சேற்றில் சிக்கியதால் டிராக்டரை எடுக்க முடியவில்லை. உடனே, டிராக்டரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்துக் கந்திலி காவல்துறையினருக்கு வட்டாட்சியர் சுமதி தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு வந்த கந்திலி காவல் துறையினர் சேற்றில் சிக்கிய டிராக்டரை மீட்டுக் காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். பிறகு, கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், விவசாய நிலத்தில் மண் கடத்தலில் ஈடுபட்டு, வட்டாட்சியர் மீது டிராக்டரை ஏற்ற முயன்றது நாட்றாம்பள்ளி அடுத்த கிழக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (40), அவரது நண்பர் அசோக் (38) உட்பட 3 பேர் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற பெண் வட்டாட்சியர் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் நாட்றாம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in