

விளாத்திகுளத்தில் போலீஸார் நடத்திய வாகன சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் பெங்களூருவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று காவல் உதவி ஆய்வாளர் காசிலிங்கம் தலைமையிலான போலீஸார் விளாத்திகுளம் - வேம்பார் நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையில் பெங்களூருவிலிருந்து கோவில்பட்டிக்கு அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த சரக்கு வாகனத்திலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா புகையிலை பாக்கெட்கள் அடங்கிய 50 மூடைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பான்மசாலா பொருள்களை கடத்தி வந்ததாக கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ராஜன்னா மகன் மோகன் குமார் (30), மல்லிப்பட்டணத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா மகன் மஞ்சுநாதா (30) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக விளாத்திகுளம் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.