

கரூரில் தீயில் உடல் கருகி தாயும், புகையில் மூச்சுத்திணறி 2 மகன்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தாந்தோணிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடம்பந்தேனலைச் சேர்ந்தவர் கருப்பையா (54). இவர் மனைவி குப்பம்மாள் (50). இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே கரூர் வந்து குடியேறிவிட்டனர். இவர்களின் மகள் முத்துலட்சுமி (29).
கரூர் அருகேயுள்ள கல்லுமடையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முத்துலட்சுமிக்கும், பாலகிருஷ்ணனுக்கும் திருமணமானது. பாலகிருஷ்ணன் க.பரமத்தியில் பேக்கரி கடை வைத்திருந்தார். இத்தம்பதிக்கு ரக்ஷித் (3), தக்ஷித் (2) என இரு மகன்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் கடன் தொல்லை காரணமாக பாலகிருஷ்ணன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து, கரூர் ராயனூர் பகவதியம்மன் கோயில் தெருவில் உள்ள தந்தை வீட்டில் முத்துலட்சுமி குழந்தைகளுடன் வசித்து வந்தார். கருப்பையா, குப்பம்மாள் நேற்று (ஆக.9) சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், அவர்கள் வீட்டிலிருந்து இன்று (ஆக.10) அதிகாலை அதிக அளவில் புகை வந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தாந்தோணிமலை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
அவர்கள் வந்து கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது செல்போனுக்கு 'சார்ஜ்' போடப்பட்டிருந்த நிலையில், அருகேயுள்ள சோபா முற்றிலும் எரிந்த நிலையிலும் அதனருகே முத்துலட்சுமி உடல் கருகி சடலமாகவும், அருகேயுள்ள மற்றொரு அறையில் மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் ரக்ஷித், தக்ஷித் ஆகியோர் கிடந்தனர்.
குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். முத்துலட்சுமி சடலத்தை தாந்தோணிமலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போனுக்கு 'சார்ஜ்' போட்டிருந்த நிலையில், செல்போன் வெடித்ததால் முத்துலட்சுமி உடல் கருகி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என தாந்தோணிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.