Published : 08 Aug 2020 04:44 PM
Last Updated : 08 Aug 2020 04:44 PM

வாணியம்பாடியில் கஞ்சா விற்பனையில் சிக்கிய பெண்ணின் சொத்துகள் அரசுடைமை

மகேஸ்வரியின் வீட்டில் இருந்து கடந்த மே மாதம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 லட்சம் ரொக்கப் பணம்.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் கஞ்சா விற்பனையில் சிக்கிய, பிரபல பெண் சாராய வியாபாரியின் சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (39). இவரும் இவரது குடும்பத்தினரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாராயம் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மகேஸ்வரியைக் காவல் துறையினர் கைது செய்தாலும் அவரது உறவினர்கள் சாராயத் தொழிலைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மகேஸ்வரி

இதற்கிடையில், வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர், கடந்த மே மாதம் நேதாஜி நகரில் உள்ள மகேஸ்வரியின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுக்கி வைத்திருந்த 21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சத்து 14 ஆயிரம் பணம், மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததுடன் உஷா, காவ்யா, மகேஸ்வரியின் மகன் தேவேந்திரன் ஆகியோரைக் கைது செய்தனர்.

மகேஸ்வரி வீட்டில் கடந்த மே மாதம் பறிமுதல் செய்யப்பட்ட 21 கிலோ கஞ்சா

இவர்கள் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையின் மூலம் சம்பாதித்த பணத்தில் வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்கள், வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் வாங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மகேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் சட்ட விரோதமாக வாங்கிய சொத்துகளைப் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சொத்துகள் முடக்கம்

வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் மகேஸ்வரியின் பெயரில் 846 சதுர அடியில் உள்ள ஒரு வீடு, வளையாட்டில் மகேஸ்வரியின் பெயரில் உள்ள 30 சென்ட் நிலம், அதே பகுதியில் சின்னராசுவின் பெயரில் உள்ள 1.34 ஏக்கர் நிலம், அம்பூர்பேட்டையில் மகேஸ்வரியின் கணவர் சீனிவாசன் பெயரில் உள்ள 3 சென்ட் காலி மனை, அதே பகுதியில் மகேஸ்வரியின் மகன் தேவேந்திரன் பெயரில் உள்ள 9 சென்ட் காலி மனை உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டது. இந்தச் சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய் மதிப்புடையது என்று கூறப்படுகிறது.

இந்தச் சொத்துகளை அரசுடைமையாக்க மத்திய அரசின் வருவாய்த் துறைக்குப் பரிந்துரை செய்த காவல் துறையினர் மேற்கண்ட சொத்துகளை யாரும் வாங்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்பதற்கான அறிவிப்பையும் கடந்த ஜூலை 7-ம் தேதி வெளியிட்டனர்.

சொத்துகள் அரசுடைமை

காவல் துறையினர் பரிந்துரை செய்த சொத்துகளை வாங்கியதற்கான வருவாய் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி மகேஸ்வரி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மத்திய வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது. இதற்கு உரிய பதில் அளிக்கப்படாத நிலையில், காவல் துறையினர் பரிந்துரை செய்த சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான அறிவிப்பை மத்திய வருவாய்த்துறை வெளியிட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் இன்று (ஆக.8) தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் முறைகேடான வருமானத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதும் இந்தச் சொத்துகளை ஏலம் விடும் நடவடிக்கையில் மத்திய வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினர்.

புதிய சொத்துகள் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறும்போது, "காவல் துறையில் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்ட சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மகேஸ்வரி மற்றும் அவரது கூட்டாளிகள் 60 முதல் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேலும் பல சொத்துகளையும் அடையாளம் கண்டுள்ளோம். இவற்றின் விவரங்களையும் தயார் செய்து அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

காவல் துறையினரால் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள சொத்துகளின் சந்தை மதிப்பு கோடிகளைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x