

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறையில் அடைக்கச் சென்றபோது கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. சாதிப் பெயரை சொல்லி திட்டிய வழக்கில் பிரபுவை நரிக்குடி போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிளைச் சிறையில் அடைக்க போலீஸார் அழைத்து வந்தபோது பிரபு திடீரென தப்பியோடினார்.
தப்பியோடிய கைதி பிரபுவை போலீஸார் துரத்திச் சென்றனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்களும் துரத்திச் சென்று பிரபுவை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைதி தப்பி ஓடிய சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடியது குறித்து பிரபு மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.