

முன்விரோதத்தால் ஊர்த்தலைவரை கொலை செய்த 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டைனை வழங்கி ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்தவர் முகம்மது யூசுப்(40). ஊர்த் தலைவராக இருந்த இவர் மீண்டும் ஊர்த் தலைவராக போட்டியிட முயற்சித்துள்ளார். இதனால் முகம்மது யூசுப்பிற்கும், அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 4.9.2011 அன்று எஸ்.பி.பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது முகம்மது யூசுப்பை, ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தது.
இதுதொடர்பாக முகம்மது யூசுப்பின் தந்தை சேக் முகம்மது அளித்த புகாரின்பேரில், எஸ்.பி.பட்டினம் போலீஸார், அதே ஊரைச் சேர்ந்த நாகூர்கனி, செய்யது அபுதாகீர், கலந்தர் ரபீக், முகம்மது அப்துல்லா, சகுபர் அலி, கலந்தர் அலி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போதே நாகூர் கனி இறந்துவிட்டார்.
அதனையடுத்து இன்று நடந்த இறுதி விசாரணையில் முகம்மது யூசுப்பை கொலை செய்த முகம்மது அபுதாகீர் மகன் செய்யது அபுதாகீர்(39), நசுருதீன் மகன் கலந்தர் ரபீக்(37) ஆகியோருக்கு, ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5000 அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) ஆர்.சண்முக சுந்தரம் தீர்ப்பளித்தார்.
மேலும் முகம்மது அப்துல்லா, சகுபர் அலி, கலந்தர் அலி ஆகியோரை விடுதலை செய்தும், ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கலந்தர் ரபீக் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சவுந்தர பாண்டியன் ஆஜரானார்.