

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே டாஸ்மாக் கடைக்குச் சென்று சீருடையில் மது அருந்திய சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆமத்துர் காவல் நிலையத்தில் கோடீஸ்வரன் என்பவர் சிறப்பு எஸ்.ஐ.ஆக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்தபோது சிவகாசி சாலையில் மத்தியசேனை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்று சீருடையில் இருந்தவாறே மது அருந்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் கடையில் சீருடையுடனும், வாக்கிடாக்கியுடனும் சிறப்பு எஸ்.ஐ. மது அருந்தியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், இத்தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்குச் சென்றது. அதையடுத்து, சிறப்பு எஸ்.ஐ. கோடீஸ்வரனை தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாள் இன்று உத்தரவு பிறப்பித்தார்.