தேவகோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது: பைக் பறிமுதல்  

தேவகோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது: பைக் பறிமுதல்  
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரது மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

தேவகோட்டை அருகே தாணிச்சா ஊரணியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (26). இவரும், இவரது தாயார் சித்ராவும் (55) ஜூலை 21-ம் தேதி இரவு வீட்டின் முன் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

அதில் சித்ரா காயமடைந்தார். இதுகுறித்து ஆறாவயல் போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தாணிச்சாஊரணியைச் சேர்ந்த அஜீத்குமாரை (20) போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தாணிச்சாஊரணியைச் சேர்ந்த ராஜபாண்டியும், அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமாரும் (23) நண்பர்கள். இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய விஜயகுமார் குறித்து ராஜபாண்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டு, தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர்.

இதற்கிடையில் ஜூன் 24-ம் தேதி விஜயகுமாரின் தாயார் சரஸ்வதியை (50), ராஜபாண்டி உள்ளிட்ட 6 பேர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வழக்கில் 6 பேரும் முன்ஜாமின் பெற்றனர்.

இந்நிலையில் முன்விரோதத்தால் விஜயகுமார், பனங்காட்டான்வயலைச் சேர்ந்த முத்துராமன் (28), அமராவதிபுதூரைச் சேர்ந்த மதுபாலா (22) ஆகியோருடன் சேர்ந்து ராஜபாண்டி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

இதற்கு அஜீத்குமார் என்பவர் உதவியாக இருந்துள்ளார். இதையடுத்து அஜீத்குமாரை கைது செய்தோம், என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in