

அரியலூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வீட்டில் 32 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், அரை கிலோ வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வைத்திலிங்கம் (71). இவரது வீட்டில் நேற்று (ஜூலை 23) இரவு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் வாசலில் படுத்திருந்த வைத்திலிங்கம், இன்று (ஜூலை 24) அதிகாலை 3 மணியளவில் தெருவின் குடிநீர் டேங்க் மின்மோட்டாரை நிறுத்தச் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டின் உள்ளே படுத்திருந்த அவரது மனைவி வசந்தா சத்தம் கேட்டு எழுந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள் அறையில் இருந்து இரண்டு பேர் வெளியே ஓடுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கூக்குரல் இட்டுள்ளார்.
உடனடியாக வைத்திலிங்கமும், அருகில் வசிப்பவர்களும் வருவதற்குள் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். உள் அறையில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 32 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வளைகளைத் துண்டித்து, பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வைத்திலிங்கம் அளித்த புகாரில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோப்ப நாயும், தடயவியல் நிபுணர்களும் நிகழ்விடத்திற்கு வந்து தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.