

அரியலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஏரி மற்றும் ஆற்றில் மூழ்கிய இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (23). பொறியியல் மாணவரான இவர், தனது நண்பர்கள் ஸ்ரீகாந்த் (22), விமல் (20) ஆகியோருடன் நேற்று (ஜூலை.21) மாலை உடையார்பாளையம் பெரிய ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இளைஞர்கள் 3 பேரில் விமல், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் கரைக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், விக்னேஷ் கரைக்குத் திரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார். இதனையடுத்து, இளைஞர்கள் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய இளைஞரை இரவு முழுவதும் தேடிய நிலையில், இன்று (ஜூலை 22) காலை 7 மணியளவில் இறந்த நிலையில் விக்னேஷின் உடலை மீட்டனர். தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய இளைஞர்
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அண்ணங்காரன் பேட்டை அடுத்த ஆயிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (18). பொறியியல் மாணவரான இவர் நேற்று மாலை அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் பட்டம் விடச் சென்றுள்ளார். அப்போது, கொள்ளிடம் ஆற்றுத் தண்ணீரில் இறங்கிய நந்தகுமாரைக் காணவில்லை.
தகவலறிந்த கும்பகோணம் தீயணைப்புத்துறை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு சுமார் 10 மணியளவில் இறந்த நிலையில் நந்தகுமாரின் உடலை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த இருவேறு சம்பவங்களும் அப்பகுதியில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.