Last Updated : 20 Jul, 2020 05:53 PM

 

Published : 20 Jul 2020 05:53 PM
Last Updated : 20 Jul 2020 05:53 PM

182 அடி உயர ஆலய கோபுரத்தில் ஏறி தேவாலய ஊழியர் குடும்பத்தோடு தற்கொலை மிரட்டல்: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் தேவாலய ஊழியர் தேவாலயத்தின் 182 அடி உயரம் கொண்ட கோபுரத்தில், தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் 8 மணி நேரத்துக்கு மேலாக ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் அகஸ்டின் (38). இவர் நாசேரத்தில் உள்ள தூத்துக்குடி-நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்துக்கு சொந்தமான தூய யோவான் பேராலய சேகரத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை அந்த ஆலயத்தின் சேகர குரு திடீரென பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும், அந்த பணியிடத்துக்கு வேறு நபரை நியமித்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயரை சந்தித்து புகார் அளிக்க அகஸ்டின் முயன்றுள்ளார். ஆனால், அவரை சந்தித்த பேராயர் மறுத்துவிட்டாராம்.

இதனால் விரக்தியடைந்த அகஸ்டின் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென தனது மனைவி கிறிஸ்டி (36). மகன்கள் ஜான் (10), கேமரூ (8) ஆகியோருடன் தேவாலயத்தின் 182 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று கொண்டு, குடும்பத்தோடு குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆலய மணி தொடர்ச்சியாக அடிக்கப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் ஆலயம் முன்பு கூடினர். தகவல் அறிந்து ஏரல் வட்டாட்சியர் அற்புதமணி, டிஎஸ்பி (பொ) நாகராஜன், ஆய்வாளர் சகாய சாந்தி உள்ளிட்டோர் அங்கு வந்து மைக் மூலம் அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். மேலும் செல்போன் மூலம் அகஸ்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்கப்படும் என பேராலய சேகர குரூ ஆண்ட்ரு ஞான ஒளி மைக் மூலம் அறிவித்தும் அகஸ்டின் அசைந்து கொடுக்கவில்லை.

மேலும், பணியிடை நீக்கம் ரத்து குறித்து வாட்ஸ்அப் மூலம் அவரது செல்போனுக்கு தகவல் அனுப்பப்பட்டது. இருப்பினும் பேராயர் நேரடியாக வந்து பேசினால் தான் கீழே இறங்குவோம் என கூறிக் கொண்டு அகஸ்டின் தனது குடும்பத்தோடு மேலேயே நின்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதற்கு பிறகும் அகஸ்டின் கீழே இறங்க மறுத்து கோபுரத்தின் உச்சியிலேயே குடும்பத்தோடு நின்று தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

காலை 8.30 மணிக்கு தொடங்கிய பேராட்டம் 8 மணி நேரத்தை தாண்டி மாலை 4.30 மணிக்கு பிறகும் தொடர்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஏராளமான மக்கள் கோயில் முன்பு திரண்டிருந்து வேடிக்கை பார்த்தனர். அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x