சிவகங்கை ஆட்சியர் குறித்து அவதூறு பரப்பியதாக 4 திமுவினர் மீது வழக்கு: உடல்நலக்குறைவால் கைதானவர் விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு

சிவகங்கை ஆட்சியர் குறித்து அவதூறு பரப்பியதாக 4 திமுவினர் மீது வழக்கு: உடல்நலக்குறைவால் கைதானவர் விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட துணைச் செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இதில் கைதான ஒருவருக்கு திடீரென உடநலக்குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

திருப்புவனத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், மேற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் தேவதாஸ், கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மோகன் முத்து, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறு தகவலை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் புகாரில் சேங்கைமாறன் உள்ளிட்ட 4 பேர் மீது திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மற்றவர்கள் தலைமறைவான நிலையில் நேற்று தேவதாசை மட்டும் கைது செய்தனர்.

அவரை விடுவிக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் திமுகவினர் குவிந்தனர். இதற்கிடையில் தேவதாசுக்கு உடல்நலக்குறை ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து எஸ்.ஐ. பாலமுருகனிடம் கேட்டபோது, ‘ தேவதாசுக்கு உயர் ரத்தழுத்தம் ஏற்பட்டதால், அவரை ஜாமீனில் விடுவித்தோம்,’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in