

கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து பலர் தங்கள் வேலையை இழந்து வருமானத்துக்கு வழியின்றித் தவிக்கின்றனர். இருக்கும் சேமிப்பை வைத்தாவது கொஞ்ச காலம் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் பலரும் காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கிறனர். இப்போது அந்த நம்பிக்கைக்கும் வேட்டு வைக்க சில மோசடி கும்பல்கள் கிளம்பியிருக்கின்றன.
இந்த மோசடி ஒன்றும் புதியது அல்ல. ‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’ எனும் பெயரில் ஏராளமானோரைப் படுகுழியில் தள்ளிய பழைய தந்திரம்தான். தற்போது புதுப் பொலிவுடன் சமூக வலைதளங்களில், குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் உலா வர ஆரம்பித்திருப்பதுதான் ஒரே வித்தியாசம். இதில் அதிகம் குறிவைக்கப்படுவது இளைஞர்கள்தான்.
பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் இளைஞர்கள் சமூக வலைதளங்களே கதி என்று கிடக்கிறார்கள். இதையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் மோசடி நிறுவனங்கள் தந்திரமாக வலைவிரிக்கின்றன. ‘ரூ. 5,000 கட்டினால் வாரம் ரூ.375 உங்கள் கணக்கில் செலுத்தப்படும். இப்படியாக 40 வாரங்களில் உங்கள் கணக்கில் ரூ.15,000 செலுத்தப்பட்டுவிடும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மேலும் பலரை இந்தத் திட்டத்தில் சேர்த்துவிட வேண்டும். அவ்வளவுதான்’ என்கிற ரீதியில் விளம்பரங்கள் கவர்ந்திழுக்கின்றன.
அத்துடன், ‘வீட்டிலேயே கால் மேல் கால் போட்டுக்கொண்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம், எங்களின் முன்னாள் வாடிக்கையாளர்கள் போல் வேலைக்கே செல்லாமல் ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கலாம், பென்ஸ் காரில் பறக்கலாம்’ என்றெல்லாம் ஜிகினா பூசிய விளம்பரங்களைச் சமூக வலைதளங்களில் இந்நிறுவனங்கள் பரப்பிவருகின்றன.
இந்த மோசடிக் கும்பல்கள் எப்படி இயங்குகின்றன, இளைஞர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள களமிறங்கினேன். முதலில் இந்நிறுவனங்களிடம் பணத்தைப் பறிகொடுத்த மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரிடம் பேசினேன்.
“பாக்கெட் மணியிலிருந்து சேர்த்துவச்சு பணத்தைக் கொண்டு போய் இதில் போட்டேன். ரெண்டு மாசம் பணம் வந்துச்சு. நானும் நம்பிக்கையோட இருந்தேன். அப்புறம் அந்த நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், வெப் சைட்டையும் டெலிட் பண்ணிட்டு ஓடிட்டாங்க. இப்போ யாரைப் போய் பார்ப்பது, என்ன பண்றதுன்னு தெரியலை. வீட்டில் யாருக்கும் சொல்லாமல்தான் அதில் பணம் போட்டேன். இப்போ பணம் பறிபோனதைக்கூட வீட்டில் சொல்ல முடியாது” என்று புலம்பினார் அந்த மாணவர்.
இதில் பணம் போட்டுச் சேரும் இளைஞர்கள் எப்படியும் இதில் தங்கள் நண்பர்களைச் சேர்த்துவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால், தாங்கள் கணிசமான தொகையைச் சம்பாதித்திருப்பதாகத் தினமும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொய்யான வங்கி பரிவர்த்தனை ஆவணங்களை அவர்கள் பதிவேற்றுகின்றனர். இவற்றையும் அந்த நிறுவனங்களே தயார் செய்து கொடுக்கின்றனவாம். ஏன் என்று கேட்டால், ‘புதிய நபர்களை உள்ளே வரவழைக்க நீங்கள் இப்படி வியாபாரத் தந்திரங்களை மேற்கொள்ள வேண்டும்’ என்று உபதேசிக்கிறார்களாம் அந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த திட்டத்தில் சேரச் சொல்லி வற்புறுத்தும் இளைஞர்களை அவர்களின் நண்பர்கள் வெறுத்து ஒதுக்குவதும் நடக்கிறது. அவர்களை நம்பிப் பணம் போடுபவர்கள் பணத்தை இழந்ததும் அவர்களுக்கிடையே மனஸ்தாபமும் ஏற்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் இளைஞர்கள்.
ரூ.5,000-ல் தொடங்கி ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்று சொல்லும் இந்நிறுவனங்கள் பல பெயர்களில் மாறி மாறி இயங்கி வருகின்றன. இந்த மோசடியில் பிரதான இடத்தைப் பெற்றிருக்கும் நிறுவனங்கள் FTM EMEX Inernational, RocketHub ஆகியவைதான் என்கிறார்கள் பணத்தைப் பறிகொடுத்தவர்கள்.
மோசடி எப்படி அரங்கேறுகிறது என்பதை அறிந்துகொள்ள, FTM EMEX International நிறுவனத்தின் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அழைத்தேன். பெங்களூருவிலிருந்து பேசுவதாகவும், அவர்களின் திட்டத்தில் சேர விரும்புவதாகவும் கூறினேன். உடனடியாக, பெங்களூருவில் இருக்கும் ஜெயீஷ் என்பவரின் எண்ணைக் கொடுத்தார்கள்.
அவரை அழைத்துப் பேசினேன். “நாளைதான் பெங்களூருவில் புதிய கிளை திறக்கிறோம், உடனடியாக என்னை நேரில் வந்து சந்தித்தால் நீங்கள் இத்திட்டத்தில் இணைந்துவிடலாம்” என்றார் அவர். “இந்தத் திட்டத்தைப் பற்றி விளக்குங்கள்” என்று கேட்டதும் வழக்கமாக மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்பவர்கள் என்னென்ன பித்தலாட்டம் செய்வார்களோ அவற்றையெல்லாம் அவிழ்த்துவிட ஆரம்பித்தார்.
“பணம் கட்டிவிட்டு நீங்கள் சும்மா இருந்தாலே போதும் உங்களுக்கு வாரவாரம் பணம் வரும். நிறுவனத்தின் பங்குதாரராக ஆகிவிடுவீர்கள்” என்றார். “சரி… நிஃப்டி அல்லது சிபி அமைப்பில் உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்துள்ளீர்களா?” என்று கேட்டால், சுதாரித்துக்கொண்டு, “இல்லை இல்லை இது பொதுத்துறை நிறுவனம் அல்ல, தனியார் நிறுவனம் நீங்கள் பங்குதாரர் இல்லை, பார்ட்னர் மாதிரி…” என்று மழுப்பினார். அதேசமயம், இறுதிவரை என்னைப் பணம் கட்டவைப்பதிலேயே குறியாக இருந்தார். அவருக்குப் பிடி கொடுக்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டேன். மீண்டும் பல முறை அவரிடமிருந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது.
இது சம்பந்தமாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “முன்பெல்லாம் மல்டிலெவல் மார்க்கெட்டிங் செய்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் நடத்தி மக்களை ஏமாற்றுவார்கள். தற்போது தங்கள் முகங்களைப் பொதுவெளியில் காட்டாமல் இணையம் வாயிலாக ரகசியமாக மோசடி செய்வது அவர்களுக்குச் சுலபமாக இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் ஏமாந்ததாக இதுவரை எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை. பொதுமுடக்கம் முடிந்தவுடன் நீங்களே வந்து இதுபற்றிப் பொருளாதாரக் குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுங்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.
உடலுக்கு அல்லது மூளைக்கு உழைப்பு இல்லாமல் இந்த உலகத்தில் நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கவே முடியாது என்பதே நிதர்சனம். பணத்தைக் கட்டிவிட்டு நீங்கள் வீட்டில் சும்மா இருந்துக்கொண்டே பணம் சம்பாதிக்கலாம் என்று யாரேனும் உங்களிடம் கூறினால், அவரின் நோக்கம் இரண்டுதான். ஒன்று… உங்களைத் தவறான தொழிலுக்குள் இழுக்கப் பார்க்கிறார்கள் அல்லது உங்களின் பணத்தை உருவிக்கொண்டு உங்களை நடுத்தெருவில் நிறுத்தப் போகிறார்கள்.
உஷாராக இருங்கள் மக்களே!
- க.விக்னேஷ்வரன்