

குமரியில் பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகனைக் காப்பாற்றும் நோக்கில் சாட்சியங்களை அழிக்க முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த காசி மீது சமூக வலைத்தளங்கள் மூலமாக இளம்பெண்களை தொடர்புகொண்டு காதலிப்பது போல் நடித்து அவர்களோடு தனியாக இருப்பதை ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதையொட்டி பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரில் காசி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நான்கு பெண்களும் ஒரு இளைஞரும் கொடுத்த புகாரில், ஒரு போக்சோ வழக்கு 2 பாலியல் பலாத்கார வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என ஆறு வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே காசி குண்டர் சட்டத்தில் கைதானான். மேலும் இந்த வழக்குகள் சிபிசிஐடி போலிஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் காசியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டதன் அடிப்படையில் ஐந்து நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் காசியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காசியின் சிபிசிஐடி காவல் முடிந்ததை தொடர்ந்து காசி மற்றும் அவரது நண்பர் டைசன் ஜினோ ஆகியோர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மெமரி கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.
காசியிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் மெமரி கார்டு போன்றவற்றை ஆய்வு செய்த சைபர் க்ரைம் போலீஸார் அதில் இருந்து ஏராளமான ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் இந்த ஆதாரங்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தனது மகனைக் காப்பாற்றும் நோக்கில் சாட்சியங்களை அழித்ததாக சிபிசிஐடி போலீஸார் காசியின் தந்தை தங்க பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.