

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதாளச் சாக்கடைக்காக குழாய் பதித்தபோது மண்சரிந்து தொழிலாளி ஒருவர் இறந்தார்.
காரைக்குடி நகராட்சியில் ரூ.112.53 கோடியில் பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழவூரணி பகுதியில் பாதாளச் சாக்கடைக்காக குழாய் பதிக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று அங்குள்ள 12 அடி ஆழ குழியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த ராஜா (45) மீது திடீரென மண் சரிந்து விழுந்தது.
மண்ணில் புதைந்து ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராஜாவின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணி செய்ததே தொழிலாளர் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. காரைக்குடியில் பாதாளச் சாக்கடை பணிகள் 4 ஆண்டுகளாக மந்தமாக நடந்து வருகிறது.
மேலும் பணி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு தடுப்புகள் வைப்பதில்லை. தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதில்லை என தொடர்ந்து புகார் எழுந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.