

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டி லட்சுமி மில் மேல காலனியை சேர்ந்தவர் சிவராஜ் (42). ஜோதி நகரைச் சேர்ந்தவர் அசோகன் (60). இவர்கள் கழிவு குச்சி வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று மாலை கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள ஒரு தனியார் தீப்பெட்டி ஆலை கழிவு குச்சிகள் வாங்கச் சென்றனர். ஆலையில் கழிவு குச்சிகளை சேகரித்து சாக்குகளில் கட்டி கொண்டிருந்தபோது திடீரென உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு இருவரும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே ஆணையில் பற்றி எரிந்த தீ மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்து அணைத்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.