Published : 22 Jun 2020 03:46 PM
Last Updated : 22 Jun 2020 03:46 PM

பெரம்பலூரில் அர்ச்சகரைப் பணி நிரந்தரம் செய்ய லஞ்சம் பெற்ற கோயில் செயல் அலுவலர் கைது

பெரம்பலூரில் கோயில் அர்ச்சகரைப் பணி நிரந்தரம் செய்ய லஞ்சம் பெற்ற கோயில் செயல் அலுவலர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தற்காலிக உதவி எழுத்தர் ஆகியோரை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் தற்காலிக உதவி அர்ச்சகராக பணியாற்றி வருபவர் பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு, தீபம் நகரைச் சேர்ந்த சக்கரவர்த்தி (40). இந்தக் கோயிலின் செயல் அலுவலராக இருப்பவர் பெரம்பலூர் மாவட்டம் எசனையைச் சேர்ந்த மணி (45). சக்கரவர்த்தியைப் பணி நிரந்தரம் செய்வதற்காக மதனகோபால சுவாமி கோயில் செயல் அலுவலரான மணி, ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டு, அதை இரண்டு தவணையாகக் கொடுக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்கரவர்த்தி, இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்பு) போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி முதல் தவணை லஞ்சத் தொகையான ரூ.20 ஆயிரத்தை ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளாக சக்கரவர்த்தி, மதன கோபாலசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் செயல் அலுவலர் மணியிடம் இன்று (ஜூன் 22) மதியம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், காவல் ஆய்வாளர்கள் சுலோச்சனா, ரத்தினவள்ளி ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், செயல் அலுவலர் மணி (45) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தற்காலிக உதவி எழுத்தர் புகழேந்தி (54) ஆகியோரைக் கைது செய்தனர்.

மேலும், எசனையிலுள்ள செயல் அலுவலர் மணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x