மதுரையில் பல கோடி ரூபாய் சொத்து முறைகேடாக விற்பனை: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் பல கோடி ரூபாய் சொத்து முறைகேடாக விற்பனை: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரையில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மனைவி பத்மினி. இவர்களுக்கு ஜெயப்ரகாஷ் என்ற மூளை வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தை உள்ளது. இவர்களுக்கு மதுரையில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. கடந்த 2009-ல் பத்மினி இறந்தார். இதைத் தொடர்ந்து வசந்தகுமார், ராஜேஸ்வரி என்னும் பெண்ணை 2014-ல் திருமணம் செய்தார். வசந்தகுமார் 2016-ல் இறந்தார். அடுத்து ராஜேஸ்வரியும் இறந்தார்.

இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதைப் பயன்படுத்திப் போலி ஆவணங்கள் தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் சிலர், சொத்துகளை விற்றனர். இது தொடர்பாக வசந்தகுமாரின் சகோதரி பிரேமாவதி ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் செந்தில்குமார், மீனா, ராஜ்குமார், வழக்கறிஞர் சுலைமான் பாட்ஷா, ராஜலட்சுமி, ஆசைத்தம்பி, விகாஷ், ஸ்வாதி, புருஷோத்தமன், முத்துகுமார் மற்றும் பாபு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் சுலைமான் பாட்ஷா ஜாமீன் கேட்டும், மீனா, ராஜ்குமார், விகாஷ், ஸ்வாதி ஆகியோர் முன்ஜாமீன் கோரியும் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை நீதிபதி பி.என்.பிரகாஷ் தள்ளுபடி செய்து, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in