

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீட்டில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டையில் சட்ட விரோதமாக சிலர் குட்கா பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்தன. அதையடுத்து, அருப்புக்கோட்டை சிங்காரத்தோப்பு பகுதியில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அருப்புக்கோட்டை நகர் போலீஸார் அக்குறிப்பிட்ட வீட்டில் இன்று (ஜூன் 20) திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, மூட்டை மூட்டையாக அங்கு சட்ட விரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா வகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெயபாலாஜி என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான அவரது கூட்டாளியான விமல் என்பவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.