

நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்பவர் முகநூல், மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம் பழகி ஆபாசப் படம் எடுத்து அவர்களை மிரட்டி, பண மோசடியில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் காசி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. காசியையும், அவருக்கு உடந்தையாக இருந்த டேசன் ஜினோ என்பவரையும் சிபிசிஐடி போலீஸார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையில் போலீஸார் நடத்திய விசாரணையில் காசியுடன் தொடர்புடையவர்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இத்துடன் சென்னையில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காசியை கணேசபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீஸார் அங்கு வைத்து 2 மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டிலும் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். காசியின் தொடர்பு குறித்து அவரின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டேசன் ஜினோவின் வீட்டிலும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மேலும் பல தகவல்கள், ஆதாரங்கள் சிக்கியிருப்பதால் காசியுடன் தொடர்பில் இருந்த பலரைப் பிடித்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.