Last Updated : 19 Jun, 2020 05:50 PM

 

Published : 19 Jun 2020 05:50 PM
Last Updated : 19 Jun 2020 05:50 PM

புதுச்சேரியில் மதுபாட்டில்களில் போலி முத்திரை: உரிமையாளரைத் தேடும் சிபிசிஐடி போலீஸ்; கலால் வருவாய் அதிகாரி கைது

மதுபாட்டில்களில் போலி 'ஹாலோகிராம்' முத்திரையை ஒட்டி ஏராளமாக நடைபெறும் மோசடி தொடர்பாக கலால்துறை வருவாய் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள தனியார் பிரீமியர் மதுபானத் தொழிற்சாலையில் 'ஹாலோகிராம்' என்ற முத்திரையை போலியாகத் தயாரித்து மதுபாட்டில்களில் ஒட்டி மோசடி செய்வதாகப் புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, கலால் துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கலால் துறை அதிகாரிகள் அந்த மதுபான ஆலைக்கு சீல் வைத்தனர். முதலில் வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சிபிசிஐடி எஸ்.பி. ராஜசேகர வல்லாட், காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் நடத்திய விசாரணையில், போலி 'ஹாலோகிராம்' ஸ்டிக்கர்களை மதுபாட்டில்களில் ஒட்டி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் ஆலையின் பொது மேலாளரான ஹைதராபாத்தைச் சேர்ந்த பொன்னா ராவ் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டார். ஆலையின் உரிமையாளர் சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மூன்று தனிப்படையினர் சேகரைத் தேடி வருகின்றனர்.

இச்சூழலில் கலால்துறை வருவாய் அதிகாரி அருள் பிரகாஷை சிபிசிஐடி போலீஸார் இன்று (ஜூன் 19) கைது செய்தனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் உள்ள மதுபான ஆலைகளில் 'ஹாலோகிராம்' ஸ்டிக்கர் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய கலால்துறை தனித்தனியாக வருவாய் அதிகாரிகளை நியமித்துள்ளது. அதன்படி பிரீமியர் டிஸ்லெரிக்கு ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கலால்துறை வருவாய் அதிகாரி அருள் பிரகாஷுக்கு போலி ஸ்டிக்கர் தயாரித்துப் பயன்படுத்தியது முன்கூட்டியே தெரிந்துள்ளது. அதில் அவருக்குத் தொடர்பு உள்ளது. ஆலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து போலி ஸ்டிக்கர்களையும் கைப்பற்றியுள்ளோம். அறையில் ஸ்டிக்கர் இருந்தது தனக்குத் தெரியாது என்று அதிகாரி தெரிவித்ததை ஏற்கவில்லை. கரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளோம்" என்றனர்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரியிலுள்ள மதுபான ஆலைகளில் 'ஹாலோகிராம்' ஸ்டிக்கர்கள் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு தொடங்கியது.

இந்நிலையில், காட்டேரிக்குப்பத்தில் உள்ள மற்றொரு மதுபான ஆலையிலும் இதுபோன்ற போலி 'ஹாலோகிராம்' ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆலைக்கும் கடந்த 16-ம் தேதியே போலீஸார் சீல் வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x