Last Updated : 10 Jun, 2020 10:11 PM

 

Published : 10 Jun 2020 10:11 PM
Last Updated : 10 Jun 2020 10:11 PM

நிதி நிறுவனம் நடத்தி ரூ.140 கோடி மோசடி: நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது

ராமநாதபுரம்

நிதி நிறுவனம் நடத்தி ரூ. 140 கோடி வரை மோசடி செய்துள்ளதாக, நிதி நிறுவன உரிமையாளர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் துளசிமணிகண்டன் (36). இவர் தனியார் நிறுவனத்தில்
விற்பனைப் பிரிவு மேலாளராக இருந்துள்ளார். அப்போது சிக்கல் அருகே தத்தங்குடியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஆனந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் ஆனந்த் தனக்குத் தெரிந்த சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் நீதிமணி என்பவருடன் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

லாபத்துக்கு நிறுவன உறுதிமொழி பத்திரம், காசோலையும் வழங்கியுள்ளனர். ராமநாதபுரம் சதக் சென்டரில் ஆசிரியர் ஆனந்த் நிதி நிறுவன அலுவலகத்தையும் நடத்தி வந்துள்ளார்.

இதை நம்பிய துளசி மணிகண்டன் தனது மனைவி ஐஸ்வர்யா பெயரில் கடந்த 2018-ல் ரூ.12 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதன் பின் தனது நண்பர்கள், உறவினர்கள் என 58 பேரை ரூ. 3 கோடி வரை முதலீடு செய்ய வைத்துள்ளார்.

ஏராளமானோர் முதலீடு செய்த நிலையில், அதற்கான லாபத்தை துவக்கத்தில் வழங்கிய நீதிமணி மற்றும் ஆனந்த் ஆகியோர், 2019 அக்டோபர் முதல் லாபத் தொகையை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆசிரியர் ஆனந்த் வீட்டுக்குச் சென்று துளசி மணிகண்டன் உள்ளிட்டோர் கேட்டபோது, நீதிமணி, ஆனந்த் ஆகியோர் அவர்களை மிரட்டியதாகப் துளசி மணிகண்டன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாரிடம் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீஸார் விசாரணை செய்து, நீதிமணி, ஆசிரியர் ஆனந்த், நீதிமணியின் மனைவி மேனகா ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி, துளசி மணிகண்டன் உள்ளிட்டோரிடம் ரூ. 3 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். இதில் நீதிமணி, ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்.

பஜார் போலீஸார் விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியர் ஆனந்த் மூலம் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், இதுவரை இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தொகை ரூ. 140 கோடி வரை மோசடி நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x