

திருச்சி மாவட்டத்தில் மீன்பிடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஜெலட்டின் வெடிபொருளைத் தின்பண்டம் என நினைத்துக் கடித்தபோது முகம் சிதறி சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அவனது பெரியப்பா உட்பட 2 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள அலகரை கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவருக்கு 6 வயதில் மகன் இருந்தான். இவரது பெரியப்பா கங்காதரன். இவர் நேற்று (ஜூன் 9) ஆற்றில் மீன் பிடிப்பதற்காக பாப்பாபட்டி கிராமத்திலுள்ள கல்குவாரியில் இருந்து 3 ஜெலட்டின் குச்சிகளை (வெடிபொருள்) வாங்கி வந்தார். அவற்றில் 2 ஜெலட்டின் குச்சிகளை எடுத்துக் கொண்டு உறவினர்களான தமிழரசன், மோகன்ராஜ் ஆகியோருடன் அன்று மாலையே காவிரி ஆற்றுக்குச் சென்று, அதனை வெடிக்கச் செய்து மீன் பிடித்துள்ளார். மீதமுள்ள ஒரு ஜெலட்டின் குச்சி, கங்காதரன் வீட்டின் கட்டில் மீது இருந்துள்ளது.
இதற்கிடையே தனது பெரியப்பாவான கங்காதரன் வீட்டுக்குச் சென்ற 6 வயதுச் சிறுவன், அந்த ஜெலட்டினை குச்சியை தின்பண்டம் என நினைத்து எடுத்து, வாயில் வைத்துக் கடித்துள்ளார். அப்போது ஜெலட்டின் வெடித்துச் சிதறியதில் சிறுவனின் முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை தொட்டியம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து, அவரது உறவினர்கள் சிறுவன் உடலை இரவோடு இரவாக மணமேடு காவிரியாற்றில் எரித்துவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் தொட்டியம் போலீஸாருக்கு இன்று (ஜூன் 10) மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அந்த கிராமத்துக்குச் சென்று கங்காதரன், மோகன்ராஜ் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, "ஜெலட்டின் வெடிபொருளை வயர் மூலம் பேட்டரியுடன் இணைத்து ஆற்றுக்குள் வீசி விடுவர். பிறகு கரையில் இருந்து, அதனை வெடிக்கச் செய்யும்போது ஆற்று நீருக்குள் பெரும் அதிர்வு ஏற்படும். அப்போது அந்த பகுதியிலுள்ள மீன்கள் அனைத்தும் மயங்கிய நிலைக்குச் சென்றுவிடும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, அந்த மீன்களைப் பிடித்து விடுவர்.
இதுபோன்ற முறையில் மீன் பிடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஒரு ஜெலட்டின் குச்சியை, அறியாமையாமல் எடுத்துக் கடித்தபோது, அது வெடித்துச் சிதறி சிறுவன் இறந்துவிட்டான். 2 பேரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். ஒருவரைத் தேடி வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.