

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பராமரிப்பு செய்து வந்த நிலையில், வீடு இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடையார்பாளையம் அருகேயுள்ள புளியங்குழி இருளர் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60). கூலித்தொழிலாளியான இவர், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு வழங்கிய தொகுப்பு வீட்டைச் சீரமைக்க நேற்று (ஜூன் 8) மாலை சுத்தம் செய்துள்ளார். வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் செல்வராஜ் மகன் பாண்டியன் (29), அதே தெருவைச் சேர்ந்த அவரது மாமாவின் 16 வயது மகன் கருப்பசாமி ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை சுமார் 7 மணியளவில் எதிர்பாராத விதமாக வீட்டின் ஒருபக்கச் சுவர் இடிந்து விழுந்தது. இதில், பாண்டியனும், கருப்பசாமியும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். உடன் அருகிலிருந்தவர்கள் சுவரை அகற்றிவிட்டு பார்த்தபோது, மேற்கண்ட இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனையடுத்து, இருவரது உடலும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடு பராமரிப்புப் பணியில் ஈடுபட்டபோது சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியனுக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது அவரது மனைவி 7 மாதக் கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.