

கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர், வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கி, கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி மகன் ரகுபதி (45). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு அமுதா (35) என்ற மனைவியும், 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ரகுபதி ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரு மாதங்களாக வருமானமின்றி வறுமையில் காணப்பட்டுள்ளார். மேலும் மாத வட்டி, வார வட்டி, குழுக் கடன், ஆட்டோவுக்கான இஎம்ஐ ஆகியவற்றைக் கட்ட முடியாமல் தவித்துள்ளார்.
ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுவதால் பயணிகள் ரயில் இதுவரை இயக்கப்படாததால் ஆட்டோவுக்குப் பயணிகள் வருகை இல்லாமல் வருமானமும் இல்லாமல் கடும் சிரமப்பட்ட ரகுபதி ஜூன் 8-ம் தேதி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்தக் கடிதத்தை கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரகுபதி எழுதி வைத்துள்ள கடிதத்தில், "கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னால் மாத வட்டி, வார வட்டி, குழு கடன், ஆட்டோவுக்கான இஎம்ஐ கட்ட முடியவில்லை. ரயில் இயக்கப்படாததல் பயணிகள் வருகை இன்றி வருமானமும் இல்லாததால் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.
நான் வாங்கிய கடனைக் கேட்டு எனது மனைவியிடம் நெருக்கடி தர வேண்டாம். என் குடும்பத்துக்கு அரசு ஏதாவது நிவாரணம் வழங்கி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதங்களை காவல் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் தனித்தனியாக எழுதி வைத்துவிட்டு ரகுபதி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.