தேவகோட்டையில் மதுக்கடையில் துளையிட்டு சாவகாசமாக மருந்து அருந்திய கொள்ளையர்கள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மதுக்கடையில் துளையிட்டு சாவகாசமாக மருந்து அருந்திவிட்டு மதுப்பாட்டில்களை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை ஆற்றுப்பாலம் அருகே மதுக்கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு விற்பனை மேலாளர் முத்துச்சாமி கடையை பூட்டிவிட்டுச் சென்றார். அவர் இன்று காலை கடையைத் திறந்து பார்த்தபோது கடையின் பின்புறமுள்ள சுவரில் துளையிட்டு ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் திருடப்பட்டிருந்தன.
மேலும் மற்ற மதுப்பாட்டில்களும் சிதறிக் கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துச்சாமி தேவகோட்டை நகர் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். உதவி எஸ்பி கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் பேபிஉமா, எஸ்ஐகள் மீனாட்சிசுந்தரம், திருமுருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
விசாரணையில், கடையில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பீர்களை எடுத்து சாவகாசமாக மது அருந்தியுள்ளனர். பிறகு மதுப்பாட்டில்களையும் கொள்ளையடித்துள்ளனர்.
அதிலும் அவர்களுக்கு பிடித்தமான மதுப்பாட்டில்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் இந்த கொள்ளையில் 2-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
