பிரதமர் குடியிருப்புத் திட்டம் பெயரில் சிவகங்கை நாட்டார்கால் ஆற்றில் மணல் கொள்ளை: தடுக்க இயலாமல் தவிக்கும் கிராம மக்கள்

பிரதமர் குடியிருப்புத் திட்டம் பெயரில் சிவகங்கை நாட்டார்கால் ஆற்றில் மணல் கொள்ளை: தடுக்க இயலாமல் தவிக்கும் கிராம மக்கள்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே, பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் நாட்டார்கால் ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. கரோனா ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி மணல் கொள்ளை நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் சவடு மண் பெயரில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. ஆளும்கட்சியினர் ஆதரவோடு நடப்பதால் அதிகாரிகளும் தடுப்பதில்லை. பல இடங்களில் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியும் மணல் கொள்ளை குறைந்தபாடில்லை.

இந்நிலையில் காளையார்கோவில் ஒன்றியத்தில் பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் நாட்டார்கால் ஆற்றில் மணல் அள்ளிக் கொள்ள வட்டாட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். அந்த அனுமதியை பயன்படுத்தி பெரியகண்ணனூர் அருகே ஆலங்குடி, புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.

நூதனமுறையில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க முடியாமல் கிராமமக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘பொக்லைன் இயந்திரம் மூலம் ஏராளமான லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேட்டால் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றதாக கூறுகின்றனர்,’ என்று கூறினர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் 2016-17 முதல் 2019-20 வரை ஏராளமான வீடுகள் கட்டப்படாமல் உள்ளன. தற்போது மணல் விலை அதிகமாக இருப்பதால் பயனாளிகள் வீடு கட்டுவதில் சிரமம் உள்ளது. இதையடுத்து நாட்டார்கால் ஆற்றில் தற்காலிகமாக மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in