

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி (26) என்பவர் பெண்களிடம் பழகி காதலிப்பது போல் நடித்து அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ, மற்றும் போட்டோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இது தொடர்பாக பெண் மருத்துவர் கொடுத்த புகாரை தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டார்.
மேலும் பல பெண்கள் புகார் அளித்தனர். இது தவிர பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.
இதனால் காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பல பெண்களின் வாழ்வை சீரழித்த காசி மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரணை நடத்தி உண்மை நிலையை அறிய வேண்டும் என பெண்கள் அமைப்பினர், மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் காசி மீதான வழக்குகை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் காசி மீதுள்ள போக்ஸோ, கந்துவட்டி உட்பட 6 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதற்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு பறப்பித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து 6 வழக்குகள் தொடர்பாக குமரி போலீஸார் திரட்டிய அனைத்து ஆதாரங்கள், மற்றும் விவரங்களை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படவுள்ளது.