கொள்ளையடித்த நகைகளை விற்ற கடையிலேயே கை வரிசை காட்டிய கொள்ளையன் சிக்கினார்; நடந்தது என்ன?

கொள்ளையடித்த நகைகளை விற்ற கடையிலேயே கை வரிசை காட்டிய கொள்ளையன் சிக்கினார்; நடந்தது என்ன?
Updated on
2 min read

திருப்பூரில் கொள்ளையடித்த நகைகளை விற்ற கடையிலேயே அரிவாளை காட்டி மிரட்டி கொள்ளையடித்த நபரை போலீஸார் கைது செய்தனர். கரோனா ஊரடங்கால் வீடுகளில் திருட அச்சம் ஏற்பட்டு, கடையில் கொள்ளையடிக்க முடிவு செய்தது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருப்பூர் குமரன் சாலையில் பழைய தங்க நகைகளை சந்தை விலைக்கே வாங்கும் பிரபல நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 19-ம் தேதி கிளையின் மேலாளர் தங்கராஜ் (33) மற்றும் மற்றொரு பெண் பணியாளர் என இருவர் மட்டும் பணியில் இருந்தனர். அப்போது லுங்கி உடுத்தியவாறு தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து வந்த நபர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி மிரட்டி 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.29 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்து, இருவரையும் உள்ளே வைத்துப் பூட்டிச் சென்றார். தொடர்ந்து கதவைத் திறந்து வெளியே வந்த மேலாளர் தங்கராஜ் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மாநகர காவல் துணை ஆணையர் வி.பத்ரி நாராயணன் மேற்பார்வையில் ஆய்வாளர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நிறுவனத்தின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் சேகரித்து ஆய்வு செய்தனர். இதில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது திருப்பூர் காவிலிபாளையத்தை சேர்ந்த எஸ்.அழகுவேல் (34) என்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து நேற்று போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த மார்ச் 2-ம் தேதி 15-வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சொர்ணபுரி ஹை லேண்ட் பகுதியில் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து, அரிவாளைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் 10 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததும், தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக வீடுகளில் திருட, கொள்ளையடிக்க அச்சப்பட்டு நகைகளை விற்ற நிறுவனத்திலேயே கொள்ளையடித்ததும் உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறியதாவது:
''திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சிறிய திருட்டுகளில் அழகுவேல் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் மூலம் கிடைக்கும் நகைகளை எடுத்துச் சென்று திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அந்த நிறுவனத்தில் பொய்யான காரணங்களைக் கூறி அடகு மற்றும் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தைச் செலவழித்து வந்துள்ளார். தற்போது கரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இதனால் முன்னர் போல் வீடுகளுக்குச் சென்று திருட முடியாமல் போயுள்ளது. இதனால் வருமானம் இல்லாமலும், செலவுக்குப் பணம் இல்லாமலும் சிரமத்தைச் சந்தித்து வந்த சூழலில், தான் நகைகளை விற்பனை செய்யும் நிறுவனம் நினைவுக்கு வந்துள்ளது. அந்தக் கடையின் அருகே வேறு கடைகள் இல்லை. பணியாளர்களும் குறைவாக இருப்பதையும், பாதுகாப்பு வசதிகள் பெரிய அளவில் இல்லாததையும் யோசித்து, அங்கு கொள்ளையடிக்க முடிவு செய்து, திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார் அழகுவேல்''.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in