ரூ.65 லட்சம் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது: கள்ளநோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிப்பு

ரூ.65 லட்சம் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது: கள்ளநோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் கள்ளநோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட குமரி மாவட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் கட்டு கட்டாக பதுக்கி வைத்திருந்த 65 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மூங்கிதாம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் ரூ200 நோட்டுகளை கொடுத்து மதுபானங்கள் வாங்கினார். அப்போது அந்த ரூபாய் நோட்டுகள் மீது கடை மேற்பார்வையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திறகு வந்து அந்த நோட்டுகளை பரிசோதனை செய்தபோது அந்த ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

இது தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை போலீஸார் திருமயத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், முகமது நசுருதீன், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர்களிடமிருந்து 49 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கள்ள நோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன்(41) என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் கன்னியாகுமரி விரைந்தனர். பின்னர் குமரி மாவட்ட போலீஸார் உதவியுடன் புத்தேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை கைது செய்தனர். அவரது வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.2000 ரூ.500, ரூ.200, ரூ. 20, ரூ.10 கள்ளநோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவரது வீட்டிலிருந்து ரூ 64 லட்சத்து 91 ஆயிரத்து 740 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஒரு பக்கத்தில் மட்டும் அச்சடிக்கப்பட்ட ரூ 3 லட்சம் கள்ள நோட்டுகளும் சிக்கியது. ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் சென்னையில் பொருட்காட்சிகள் நடத்துவதற்கு ஒருங்கிணைக்கும் பணிகளை செய்து வந்துள்ளார். கரோனா காரணமாக தொழில் எதுவும் இல்லாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்துள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்தபடி நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து அதனை தமிழகம் முழுவதும் உள்ள தனது நண்பர்கள் மூலம் செலவிட்டுள்ளார்.

இவர்கள் டாஸ்மாக் கடையில் உள்ள கூட்டத்தைப் பயன்படுத்தி அதில் கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி செய்தபோது மாட்டிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை போலீஸார் இவரை கைது செய்து புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in